பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு, இவரது 7 வயது மகள். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் சிறுமி வீட்டில் தூங்கியுள்ளார். பின்னர் இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, படுக்கையில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், செஞ்சி டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மாயமான சிறுமிக்கு நேற்று தான் 7-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே சிறுமி மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.