மாயமான தங்களது மகளை விரைந்து கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று தொடர்ந்து 9-வது நாளாக தனிப்படை போலீசார், தீயணைப்பு துறையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு, இவரது 7 வயது மகள். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 11-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடி விட்டு பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந் தேதி அதிகாலை திடீரென மாயமானார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதுதவிர சிறுமியை கண்டுபிடிக்க 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் அடங்கிய 10 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொண்டு, அங்கிருந்தவர்களிடமும் விசாரணை செய்தனர்.
மேலும் சத்தியமங்கலம், ஆலம்பூண்டி, செஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகள், குட்டைகள், குளங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுதவிர ஆலம்பூண்டி பகுதியில் உள்ள பாறை இடுக்குகள், மலைக்குன்றுகளிலும் டிரோன்களை பறக்க விட்டு மாயமான சிறுமியை தேடினர்.
சிறுமி மாயமான அன்று மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்ற கரும்பு தோட்டத்திலும் சல்லடை போட்டு தேடி பார்த்தனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் 10-க்கு மேற்பட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 3 செல்போன் டவர்களில் உள்ள 600 அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டு விட்டன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் ஆலம்பூண்டி சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிறுமி மாயமாகி இன்றுடன் 9 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இதுவரை சிறுமி பற்றிய எந்த ஒரு தகவலும், தடயமும் கிடைக்கவில்லை. சிறுமியின் கதி என்ன? என்பதும் தெரியவில்லை. இதனால் சிறுமி மாயமான வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாயமான தங்களது மகளை விரைந்து கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று தொடர்ந்து 9-வது நாளாக தனிப்படை போலீசார், தீயணைப்பு துறையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.