பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமியை 6 நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் மர்மம் நீடிப்பதால் ஆலம்பூண்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. கூலித்தொழிலாளி.
இவரது மனைவி பவானி. இவர்களது 2-வது மகள் ஹேமாவதி(வயது7). இவர் அந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11-ந்தேதி சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினர். பிறந்தநாள் கொண்டாடத்தை முடித்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர். சிறுமியும் பெற்றோருடன் தூங்கினார்.
இந்த நிலையில் மறுநாள் அதிகாலை 5 மணியளவில் வீட்டில், தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மாயமான சிறுமியை கண்டுபிடிக்க 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனையும் மேற்கொண்டனர்.
அத்துடன் ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், குளம், ஏரி, குட்டைகள், பாறை இடுக்குகள், மலைக்குன்றுகள் உள்ளிட்டவற்றிலும் போலீசார், தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மரக்காணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மீன்பிடி சுருக்கு மடிவலைகள் மூலம் தேடுதல் என பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுதவிர 3 செல்போன் டவர்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி மாயமாகி 6 நாட்களாகியும் இதுவரை எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிடம் பார்க்கும் சாமியாரான சரவணன் என்பவர், சிறுமி மாயமான நாளில் இருந்து திடீரென காணாமல் போயிருந்தார்.
இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று சரவணணை பிடித்தனர்.
பின்னர் சரவணனை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகவும், சிறுமி கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதேபோன்று சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சிறுமியின் தாயிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 6-வது நாளாக தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்புத்துறையினர் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமியை 6 நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் மர்மம் நீடிப்பதால் ஆலம்பூண்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.