சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊர் பகுதியில் உள்ள வீடுகள், அங்குள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பவானி (வயது 35). இவர் கோனானூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் தம்பதியினருடன் சிறுமி ஹேமலதாவை போன்ற சிறுமியை பார்த்ததாக அவசர புகார் எண்.100- க்கு அழைத்து சிறுமி குறித்த தகவலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் பவானியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதே போலவிழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக நாமக்கல் வந்து பவானியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊர் பகுதியில் உள்ள வீடுகள், அங்குள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், அங்கன்வாடி பெண் ஊழியர் பவானி கூறிய தகவலின்படி கடந்த 29-ந்தேதி அன்று கோவில் வளாகத்தில் சிறுமி மற்றும் அந்த சிறுமியுடன் வந்த தம்பதி ஆகியோர் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளனர்களா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அந்த சிறுமி செஞ்சி சிறுமிதானா? மற்றும் அந்த தம்பதி யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சேந்தமங்கலம் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரை தவிர சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உளவு பிரிவுகளான ஓ.சி.ஐ.யூ., எஸ்.பி.சி.ஐ.டி. மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உளவு தனிப்பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கி அப்பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
நான் மாயமான சிறுமி போன்ற ஒருவரை முருகன் கோவில் அருகில் பார்த்தேன். உடன் 2 பேர் இருந்தனர். அவர்களுக்கு 55 வயது, 35 வயது இருக்கும். தம்பதி போல இருந்தனர். அந்த சிறுமி நான் செல்போனில் பார்த்த சிறுமியை போலவே இருந்தார். ஏறத்தாழ 90 சதவீதம் அவராக இருக்கலாம் என்பதால் நான் இது குறித்து காவல் துறையின் 100 எண்ணிற்கு போன் செய்து போலீசிடம் தெரிவித்தேன்.
என்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் நான் பணிபுரியும் இடத்தில் என்னை பற்றி விசாரிக்கிறார்கள். நான் மனிதாபிமான அடிப்படையில் கூறினேன். என்னிடம் விவரங்களை வாங்கி கொண்டு தொடர்ந்து மனஉளைச்சல் தருகிறார்கள். எதற்காக சிறுமி குறித்த தகவலை கூறினோம் என கஷ்டமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.