சிறுமி மாயமான அதே நாளில், ரவுடி தனது நண்பருக்கு அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வைத்து பணம் வழங்கியுள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி. இவர்களது 2-வது மகள் (வயது7). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி பெற்றோர், உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் ேதடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 12 நாட்களாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து சிறுமியின் தாய், சிறுமியின் சகோதரி, கோவிலில் தங்கியிருந்த பூசாரி, சிறுமியின் பாட்டி, தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதுதவிர அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர், தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஒருவரை பிடித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட ரவுடியின் நண்பர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வாலிபரை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
சிறுமி மாயமான அதே நாளில், ரவுடி தனது நண்பருக்கு அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வைத்து பணம் வழங்கியுள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்தது. அதன் அடிப்படையிலேயே நேற்று ரவுடியின் நண்பரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. இவர்கள் பணம் பரிமாறி கொண்டதற்கும், சிறுமி மாயமான சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? எனவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து இன்று 12-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.