தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்

சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மாயமாகி இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது. ஆனாலும் இதுவரை சிறுமி பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி.

சிறுமி மாயம்

இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி நடந்தது. ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

சி.பி.சி.ஐ.டி போலீசார்

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் பெற்றோர், பாட்டி, சகோதரியிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கோவில் பூசாரி

இதுதவிர சரித்திர பதிவேடு குற்றவாளி, சிறுமியின் சகோதரிக்கு பெண் பார்த்ததாக கூறப்படும் மாப்பிள்ளை வீட்டார், கிராமத்தை சுற்றியுள்ள சிறு வழக்கு முதல் பெரிய வழக்கு வரை உள்ள குற்றவாளிகள், ஆஞ்சநேயர் கோவில் பூசாரி, ஜாதகம் எழுதியவர் என பலரிடமும் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் பதிவாகி இருந்த 600 செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

திணறல்

சிறுமி மாயமான அன்று அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளை விடிய, விடிய எரிந்துள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்று சந்தேகத்தின் பேரில் டிராக்டர் டிரைவர் ஒருவரை பிடித்தும் விசாரித்தனர்.

சிறுமி மாயமாகி இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது. ஆனாலும் இதுவரை சிறுமி பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

வீடு, வீடாக விசாரணை

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு, வீடாக சென்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கு நாளுக்கு நாள் பெரும் மர்ம கதையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. சிறுமி காணாமல் போனதாக கூறப்படும் 11-ந்தேதி இரவு அவள் தனியாக வேறு அறையில் தூங்கவில்லை. பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகிய 3 பேருடன் ஒரே அறையில்தான் படுத்து தூங்கியுள்ளாள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார்

நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி தனியாக எழுந்து வெளியே சென்றாள்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவை திறந்து உள்ளே வந்து சிறுமியை கடத்திச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT