தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சிறுமியின் பாட்டி சாந்தியிடம், சிறுமி பயின்ற பள்ளிக்கு அழைத்து வந்து 2 மணி நேரமாக விசாரணை மேற்க்கொண்டனர்.

சிறுமியின் ஊரான ஆலம்பூண்டி அடுத்த நடுப்பட்டு கிராமத்திலும் தொடர்ந்து சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த ஹேமலதா(7) என்ற சிறுமி கடந்த மாதம் 12-ந் தேதி மாயமானார். முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கானது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சிறுமி

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 30 நாட்களாக கிராமத்தில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

சிறுமி காணாமல் போன வழக்கில் இன்றோடு 41 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும், இதுவரை சிறுமி குறித்து எவ்விததுப்பும், உறுதியான தகவலும் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை கோணம் சிறுமியின் குடும்பத்தினர் பக்கமே இறுதியாக திரும்பி உள்ளது.

பாட்டியிடம் விசாரணை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.கீதா தலைமையிலான போலீசார் 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் எதிர் வீட்டு பெண் மஞ்சுளா ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியின் பாட்டி சாந்தியிடம், சிறுமி பயின்ற பள்ளிக்கு அழைத்து வந்து 2 மணி நேரமாக விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்த நிலையில், சிறுமியின் சத்தம் கேட்டதாக தெரிவித்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். அவர் சிறுமி பிறந்தநாளின் போது செஞ்சி ஆலம்பூண்டியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று 2 பேரிடம் விசாரணை

இதனால் அவரை நேற்று விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 பேர் வீதம் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் ஊரான ஆலம்பூண்டி அடுத்த நடுப்பட்டு கிராமத்திலும் தொடர்ந்து சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது.

யாக பூஜை

இந்த நிலையில் செஞ்சி சிறுமி கிடைக்க வேண்டி சத்தியமங்கலம் போலீசார் போலீஸ் நிலையத்தில் வேள்வி யாக பூஜை நடத்தியுள்ளனர்.

சிறுமி மாயமான வழக்கு போலீசாருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வழக்குகளை கையாளுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த அதிகாரிகள் நேற்று இதற்கு தீர்வு காண வேண்டி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் வேள்வி பூஜையில் ஈடுபட்டனர். இந்த பூஜையில் இன்ஸ்பெக்டர் தனது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பூஜையில் ஈடுபட்டார். இதில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT