தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் வனத்துறை குழுக்களுடன் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கீதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை மாயமானார்.
இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமிைய தேடும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக சிறுவாடி காப்புக்காட்டில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறை இடுக்குகள் உள்பட அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் குரங்கின் எலும்புக்கூடு ஒன்றும், மனித எலும்புக்கூடு ஒன்றும் கிடைத்தது.
கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே மதுபாட்டில் ஒன்று கிடந்தது. அதில் கீழ்பெண்ணாத்தூர் என இருந்தது. இதனை வைத்து அங்கு யாரேனும் காணாமல் போனரா? என விசாரித்தபோது, சங்கர் என்பவர் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் இறந்தது சங்கரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுவாடி காப்புக்காட்டில் தேடுதல் வேட்டை நடத்தியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று முதல் நடுப்பட்டு, ஆலம்பூண்டி, பரதன்தாங்கல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் வனத்துறை குழுக்களுடன் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கீதா ஆலோசனையில் ஈடுபட்டார். எந்த பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் வனத்துறை குழுவினர் மோப்பநாய்கள் உதவியுடன் நடுப்பட்டு கிராம பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நடுப்பட்டு கிராமத்தில் சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று பரதன்தாங்கல், ஆலம்பூண்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வீடுகளிலும் தேடும் பணி நடந்தது.