தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார்

சிறுமியின் குடும்பத்தாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மாயமான சம்பவத்தன்று ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட செல்போன் அழைப்பு தகவல்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த சிறுமி, கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது மாயமானார்.

சிறுமி மாயம்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்காததை தொடர்ந்து, இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் கடந்த 8 நாட்களாக ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனித்தனி குழுவாக பிரிந்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஒரு குழுவினர் சம்பவம் தொடர்பான செல்போன் அழைப்புகள், டவர் லொகேஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேராக்கள்

மற்றொரு குழுவினர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஒரு குழுவினர் பெங்களூரு சென்று அங்கு வசிக்கும் சிறுமியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற குழுவினர் மாவட்ட எல்லைகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளையொட்டிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் சிறுமியின் தந்தை வடிவேலுவை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

குடும்பத்தாரிடம் விசாரணை

இதேபோன்று சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீட்டிலேயே வைத்து அவரது தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் சகோதரி ஆகியோரிடம் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார்

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களாக கிராமம் முழுவதும் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை துல்லியமாக ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி, சிறுமி மாயமான சம்பவத்தன்று ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட செல்போன் அழைப்பு தகவல்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்று இரவு அப்பகுதியில் இருந்த மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய இந்த தகவல்கள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

செங்கல் சூளையில்...

இதற்கிடையே நேற்று சிறுமி வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வயல் வரப்புகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு சென்று அங்கும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் வடமாநில வாலிபர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும்

இந்த வழக்கில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இதுவரை உறுதியான துப்பு எதுவும் கிடைக்காததால், இந்த வழக்கு நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் பெரும் மர்மமாக நீடித்து வருகிறது.

SCROLL FOR NEXT