தமிழகத்தையே உலுக்கி வரும் பிரபல கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி சம்பந்தப்பட்ட சிறுமிகள் மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று வீரமணியின் முக்கிய உதவியாளர் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவருக்குக் கிடைத்த ரகசிய பென்டிரைவ் ஆதாரத்தின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அதில் 84 வயதான ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, 13 வயது சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியிருந்தது அம்பலமானது.
சென்னை தேனாம்பேட்டையில் வீடு எடுத்து, அங்கு சிறுமிகளை வரவழைத்து இந்த கொடூரங்களை அரங்கேற்றியதற்காகத் தொழிலதிபர் வீரமணி, அவருக்குப் புரோக்கராகச் செயல்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் வீரமணி கொடுத்த வாக்கமூலம் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இந்த பாலியல் நெட்வொர்க்கிற்கு உடந்தையாக இருந்த அவரது முக்கிய உதவியாளர் ஒருவரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைதான இந்த உதவியாளர்தான் சிறுமிகளை அழைத்து வருவதிலும், இந்த சட்டவிரோதச் செயல்களுக்குப் பின்விளைவுகள் வராமல் மேலாண்மை செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இதில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.