சென்னை ஐகோர்ட் 
தமிழக செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு வாபஸ்- வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

வழக்கு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு திரும்பப் பெற்றதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த வக்கீல் சி.ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கொடுத்த பென் டிரைவின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், புலன் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணமுடியவில்லை, இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முடியவில்லை எனக்கூறி, இந்த வழக்கை முடித்து வைத்து, சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், மேல் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகம்

பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வந்தாலும், ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் அரசியல் கட்சியினரையும், மற்றவர்களையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படத்தக்கூடும்.

மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரமணியுடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உடன் இருப்பது போன்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்றன. இது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பதால், அரசியலாக்கப்படும் இந்த வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சிபிஐ-க்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிர்பந்தம் என்ன?

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைந்துள்ளதால், இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், வழக்கு தாக்கல் செய்த பிறகுதான், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT