சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 'ஜெம்' கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன், மேலாளர் சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 7 வழக்குகள் போக்சோ வழக்குகள் ஆகும். ஒரு வழக்கு மட்டும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஆகும்.
இந்த புகார்கள் அனைத்தையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. ஒவ்வொரு வழக்கிலும் ஆதாரம் மற்றும் ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு தனித்தனியாக திரட்டி வருகிறது.
இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கை முறையாக விசாரணை நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறை பெண் அதிகாரிகள் 3 போ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா, துணை ஆணையர் ராஜலட்சுமி ஆகிய மூவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து உள்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் கமிஷனர் ராதிகா உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தெரிவித்தனர்.