தமிழக செய்திகள்

சென்னை கொடுங்கையூர் விஷவாயு மரணம்: உடலை வாங்க மறுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

போராட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கேற்றுள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பெண் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொடுங்கையூரில் மழைநீர் வடிகால் கிணற்றில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்த நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு

கொடுங்கையூர் தென்றல் நகர் 3-வது தெருவில் உள்ள 20 அடி ஆழ மழைநீர் வடிகால் கிணற்றில் மோட்டார் பழுதுபார்க்கும் பணியில் நேற்று தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிணற்றுக்குள் இறங்கிய மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த நவீன் குமார் (34) மற்றும் வேலூரைச் சேர்ந்த பொறியாளர் அஸ்மத் பாஷா (38) ஆகிய இருவரும் அங்கு தேங்கியிருந்த நச்சுவாயுவை சுவாசித்து மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போராட்டம்

இந்நிலையில், இன்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறை வாயில் முன்பு நவீனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கினர்.

உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு மற்றும் நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கேற்றுள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பெண் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை கலைந்து செல்லுமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் கீதா மற்றும் துணைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முகாமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நவீனின் குடும்பத்தாரிடம் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த நவீனின் உறவினர்களினுடைய இந்த திடீர் போராட்டத்தால் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் சற்றே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT