கள்ள நோட்டுகளை அச்சடித்தவர்கள் யார், எங்கு அச்சிடப்பட்டது, இதில் தொடர்புடையவர் யார், இவர்கள் எங்கெல்லாம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் மட்டு மல்லாமல் ஏராளமான தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும்.
ஆனால் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படக் கூடிய பல தனியார் பார்கள் கோவையில் இயங்கி வருகின்றன.
அதேபோன்றதொரு தனியார் பார் கோவை உக்கடம்- செல்வபுரம் பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது. இந்த பார் திறப்பது முதல் இரவு மூடுவது வரை எப்போதும் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும்.
நேற்று மாலை வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுடன் வந்து மது வாங்கினர். அவரை தொடர்ந்து மற்றொரு நபரும் வந்து 500 ரூபாய் கொடுத்து மது வாங்கினார். இப்படி அடுத்தடுத்து 5 பேர் வந்து 500 ரூபாய் நோட்டாக கொடுத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பார் ஊழியர்கள், அந்த ரூபாய் நோட்டுகளை சோதித்து பார்த்தனர். இதில் அந்த 5 நபர்களும் கொடுத்த நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பார் ஊழியர்கள், பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தனியார் பாருக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சந்தேக நபர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை பரிசோதித்து பார்த்தனர். அந்த நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கள்ளநோட்டுகளை கொடுத்த கரும்புக்கடையைச் சேர்ந்த அக்தர் பர்வேஸ் (வயது 21), ஆபில் (20), செல்வபுரத்தைச் சேர்ந்த யாகூலியாஸ் (19), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித் (19), முகம்மது இர்பான் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஆபில் (20), ஷாகித், முகம்மது இர்பான் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவர்.
அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். 500 ரூபாய் நோட்டை அவர் கொடுத்தார், இவர் கொடுத்தார் என மாறி, மாறி ஒவ்வொரு ஆளை கூறினர். தனியார் பாரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட மூளையாக செயல்பட்டது கோவையைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முகேஷ்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். கள்ள நோட்டுகளை அச்சடித்தவர்கள் யார், எங்கு அச்சிடப்பட்டது, இதில் தொடர்புடையவர் யார், இவர்கள் எங்கெல்லாம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.