விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 42). இவர் அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் கிரிண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று பொன்னுச்சாமி குற்றாலத்திற்கு அருவியில் குளிக்க வந்துள்ளார். இவர், வழக்கம்போல் தனது செல்போனில் கிரிண்டர் செயலியை பயன்படுத்தி உள்ளார். அப்போது அந்த செயலி மூலமாக தொடர்பு கொண்ட ஒருவர் பொன்னுச்சாமியிடம் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் அருகில் வருமாறு அந்த நபர் அழைத்ததன் பேரில் அங்கு பொன்னுச்சாமி சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு மர்ம நபர் பொன்னுச்சாமியை வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்று தென்காசி ரோட்டில் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
கடையநல்லூர் இடைகால் பஸ் நிறுத்தம் அருகில் வந்ததும், காரில் மேலும் 4 பேர் ஏறிக் கொண்டனர். வலது, இடது மற்றும் முன் சீட்டுகளில் அமர்ந்து கொண்ட அந்த கும்பல், பொன்னுச்சாமியை மாறி மாறி தாக்கி மிரட்டியது. அவரது பாக்கெட்டில் இருந்த பர்சில் இருந்த ரூ.1,000 ரொக்கத்தை பறித்துக்கொண்டதுடன், செல்போனையும், ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கிக் கொண்டனர்.
கடவுச்சொல்லை கேட்டு மிரட்டி வாங்கிய அந்த கும்பல், அவரது விருதுநகர் கிளை கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை சுருட்டி
உள்ளனர். அதோடு விடாமல், மேலாளரின் செல்போனிலிருந்த மொபைல் ஆப் மூலமாக அவசர அவசரமாக ரூ.1 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் அருப்புக்கோட்டை கிளை கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் பல கட்டங்களாக ரூ.7 லட்சம் வரை பறித்துள்ளனர்.
பணம் முழுமையாக பரிமாற்றம் ஆகும் வரை அவரை ராஜபாளையம் வரை காரிலேயே அழைத்துச் சென்ற அந்த கும்பல், வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு பின்னர் கடையநல்லூர் பஸ் நிலையத்தில் அவரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் பொன்னுச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமியிடம் பணம் பறித்த கும்பலை சேர்ந்த நெல்லை சங்கர்நகர் வடக்கு சிதம்பர நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன்(28) மற்றும் மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த முத்துசெல்வன்(23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.