தமிழக செய்திகள்

விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் கூடாது - காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவு!

தீ பாதுகாப்பு, ஒலிபெருக்கி கட்டுப்பாடு, 24 மணி நேர கண்காணிப்பு அவசியம்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்களுடன் மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் சினேகா கூறியதாவது,

எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்பு துறை போன்ற அரசு அலுவலகங்களின் தடையின்மைச் சான்று பெற்று சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து சிலை நிறுவுவதற்கான அனுமதியை சிலை அமைப்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளும், சிலைகளுக்கு வண்ணங்கள் பயன்படுத்துவதையும் ரசாயனங்கள் இல்லாத வகையில் சிலைகள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிலைகள் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு உறுதி

கூடாரங்கள் தீப்பற்றக் கூடிய வகையில் இல்லாத வகையில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பூஜையின் போது ஒலி பெருக்கி அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலையின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதிய மின் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

நல்லிணக்கம் அவசியம்

அரசியல் கட்சிகள் வகுப்புவாத தலைவர்களுக்கு ஆதரவாக பேனர்கள் போர்டுகள் அமைக்கக் கூடாது. பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

பொது அமைதி, பொது பாதுகாப்பு மத நல்லிணக்கத்தை பேணுவதற்காக வருவாய் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை சிலை அமைப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கரைப்பு கட்டுப்பாடு

மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

சிலைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சிலைகள் கரைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சுத்தம் வலியுறுத்தல்

சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் போன்றவற்றின் கரையோரங்களில் உள்ள சிலைகளை கரைக்கும் இடங்களில் எஞ்சியிருக்கும் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து அகற்ற வேண்டும்.

சிலைகள் கரைக்கும் நீரின் தரம் மதிப்பீட்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கரைப்பதற்கு முன்னும் கரைத்த பின்பும் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி கட்டாயம்

சிலை அமைப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை துறை சார்ந்த அலுவலர்கள் தனி பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும்.

கள ஆய்வு மேற்கொண்டு அரசின் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என்று கூறினார்.

அதிகாரிகள் பங்கேற்பு

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) ரெங்கநாதன் கலந்து கொண்டனர்.