தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர்கள் பரத், சீனு. கானா பாடகர்களான இருவரும் துக்க நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வந்தனர்.
கடந்த 16-ந்தேதி இரவு கானா பாடல் நிகழ்ச்சியில் கலந்து விட்டு பரத்தும் சீனுவும் படப்பை அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள நண்பரான லோகேஷ் என்பவரது வீட்டில் தங்கி இருந்தனர்.
மறுநாள் 17-ந்தேதி காலை லோகேசின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கும்பல் வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் புகுந்த பரத், சீனு ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதனை தடுக்க முயன்ற லோகேஷின் தந்தை மோகனுக்கும் வெட்டு விழுந்தது. லோகேஷ் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பி ஓடியதால் உயிர் தப்பினார்.
இந்த இரட்டைகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் இரட்டை கொலை தொடர்பாக தாம்பரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்த பல்லாவரத்தைச் சேர்ந்த மணி என்கிற ஐயப்பன்(26), படப்பையை சேர்ந்த சந்தோஷ் (23), முடிச்சூரை சேர்ந்த குமரவேல்(20), பெருங்களத்துரைச் சேர்ந்த வேலன் (19), பீர்க்கங்கரணியைச் சேர்ந்த அன்பு (20) மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கொலை திட்டத்தை அரங்கேற்றியது எப்படி? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? என்று காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலையுண்ட பரத்தை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பெட்டி என்கிற குமாரவேல் அடிக்கடி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் "பெட்டி குமரவேல் எந்த பகுதியில் உள்ளார். அவரை மிக விரைவில் கொலை செய்து விடுவேன். எனவே அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு" கூறி மிரட்டி தாக்கி சென்று உள்ளார்.
ஆனால் சிறுவன் எதுவும் தெரிவிக்காததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் முடிச்சூர் பகுதியில் உள்ள சிறுவன் வீட்டிற்கு பரத் சென்று பெட்டி குமாரவேல் குறித்து கேட்டு சிறுவனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது.
இதுபற்றி சிறுவன், பெட்டி குமரவேலிடம் தெரிவித்து அழுது உள்ளான்.
எனவே இதற்கு மேலும் பரத்தை விட்டு விட்டால் நம்மை கொலை செய்து விடுவார் என்று நினைத்து அவரை தீர்த்து கட்ட பெட்டி குமரவேல் திட்டமிட்டார். அதன்படி கடந்த 17-ந்தேதி கானா பாடல் பாடிவிட்டு பரத் தனது நண்பர் சீனுவுடன் படப்பை அருகே நண்பர் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பெட்டி குமரவேல் தனது கூட்டாளிகளுடன் சென்று பரத் மற்றும் உடன் இருந்த அவரது நண்பர் சீனுவையும் கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பரத்தை வெட்டிய போது சீனு தடுத்ததால் அவரையும் வெட்டி கொலை செய்ததாக கொலையாளிகள் தெரிவித்து உள்ளனர்.
பரத் தன்னை கொலை செய்து விடுவான் என்ற அச்சத்தால் நாங்கள் முந்திக் கொண்டோம் என்று பெட்டி குமரவேல் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். எனினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.