தென்மேற்கு பருவமழை குறைவால் நீர்வரத்து குறைந்தது, ஆனால் கர்நாடக மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92.37 அடியாக உயர்ந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இதனால் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.
இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் கர்நாடகாவில் பெய்த மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 90 அடியை தாண்டியது.
இதையடுத்து முதல்- அமைச்சர் விஜய் கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிபடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது.
நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 92.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் 55.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறையும் நிலை உருவாகி உள்ளது.
இதே போல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.