திண்டுக்கல்,
சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் வேளாண் புத்தாக்கத் தொழில்கள் தொடர்பான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’ கருத்தரங்கு இன்று (04/10/2026) திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பேசிய வல்லுநர்கள், விவசாயத் துறையில் நவீனத் தொழில்நுட்ப பயன்பாடு முதல் சந்தைப்படுத்தல் வரை ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
“விவசாயத்தைத் தொழிலாக்க, தொழிலை அடையாளமாக்க!” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இவ்விழாவில், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்முனைவோர்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட வேளாண் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
விழாவில் முக்கிய அம்சமாக மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் வெற்றி அடைந்த அருவி எக்கோ வெஞ்சர்ஸ் நிறுவனர் கலைச்செல்விக்கு ‘சிறந்த வேளாண் தொழில்முனைவோர் விருது’ வழங்கப்பட்டது.
அதே போன்று விவசாயத்தில் புதுமையான நடைமுறைகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதற்காக, கைமெர்டெக் நிறுவனர் ராகுல் பரமசிவம், கிரீன் காலர் அக்ரிடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனர் பத்மினி சம்பத், கிராப் இன்ஜின் நிறுவனர் செல்வவிநாயகம் மற்றும் மைக்கோ மேட்ரிக்ஸ் நிறுவனர் கௌதம் தாஸ் ஆகியோருக்கு 'வேளாண் புதுமையாளர் விருதுகள்' வழங்கப்பட்டன.
விழாவில் மண் காப்போம் இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், “விவசாயம் உற்பத்தி சார்ந்த தொழிலாக மட்டுமே இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் முழுமையாக கிடைக்காமல் போகிறது.
இந்த நிலையை மாற்ற விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் தொழில்முனைவோராக மாற வேண்டும்.” எனக் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் முனைவர் ரவீந்திரன் பேசுகையில், “நகரமயமாதல், மண் வளம் குறைதல், நீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றத்தால் வரும் வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற பல சவால்களுக்கு இடையே தொடர்ச்சியாக உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமானது.
இதனை எதிர்கொள்ள விவசாயத்தில் புதுமையான நடைமுறைகள், நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் ஆகியவை அவசியமாக இருக்கின்றன. இவற்றில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன.
வேளாண் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில்கள் குடிசைத் தொழில் போன்று அனைத்து இடங்களிலும் பெருக வேண்டும். காலநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களைச் சரியான முறையில் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் அலைபேசி செயலிகள், மண்ணில் தொடர் உரப் பயன்பாட்டால் நுண்ணூட்டச் சத்துகள் குறைந்துவிட்டதை அளவிடும் சென்சார்கள் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான சென்சார்கள் போன்ற ‘துல்லிய வேளாண்மை’ சார்ந்த கருவிகளை உருவாக்குவதில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை துவங்கலாம்.
அடுத்து, அறுவடைக்குப் பின் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில், பலரும் சிறுதானியங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மசாலாப் பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் மதிப்புக்கூட்டலில் பெரிதும் ஈடுபடுவதில்லை. இதில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இருப்பதன் காரணமாக, பெரும்பாலும் ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்கிறோம். இதனைத் தவிர்க்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கலாம்” என்றார்.
அகவெலி ஆர்கானிக்ஸ் நிறுவனர் அஜாய்ராஜா பேசுகையில், “ரசாயனப் பயிர் ரகங்கள் மற்றும் உரப் பயன்பாட்டால் விளைபொருட்களில் 42% அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் முன்பு 2 இட்லி சாப்பிட்ட இடத்தில், இப்போது 4 இட்லி சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், மரபு அரிசி மற்றும் சிறுதானியங்களில் இந்தச் சிக்கல் இல்லை. ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.
ஆகையால், நஞ்சு இல்லாத ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய மரபு அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுப் பொருட்களை உருவாக்கினோம். ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் கொடுக்கத் தொடங்கினோம். அவர்களின் மூலம் பரவி இன்று எங்களிடம் 6,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். நல்ல தின்பண்டங்களும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் மக்களிடம் இருக்கிறது. இதில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார்.
பிரிஷிகோ ஃபுட்ஸ் நிறுவனர் சிந்துஜா வெற்றிச்செல்வன், தினை சாக்லேட் ஸ்பிரெட் தயாரிப்பு மூலம் மாதம் ₹3 லட்சம் வருமானம் ஈட்டும் வழிகளைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, ஊர்மணம் ஃபுட்ஸ் நிறுவனர் தீபா பாரம்பரிய உணவுத் தொழில் மூலம் மாதம் ₹2 லட்சம் வருமானம் ஈட்டுவது குறித்தும், தமிழ்நாடு வேளாண் பல்கலை. வேளாண் வணிக மேம்பாட்டுத்துறை இயக்குநர் முனைவர் சோமசுந்தரம் இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை வாய்ப்புகள் மற்றும் அரசு சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி வசந்தன் செல்வம் நெறியாள்கையில் “நோயைத் தடுக்க... பயிரைக் காக்க... தரத்தை அறிய... லாபத்தை உயர்த்த!” என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வேளாண் புதுமையாளர்கள் ராகுல் பரமசிவம், பத்மினி சம்பத், செல்வவிநாயகம் மற்றும் கௌதம் தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின் நெறியாள்கையில் “குறைந்த செலவில்... நம்பிக்கையுடன் தொழிலை வளர்க்க உதவும் டிஜிட்டல் தொழில்நுட்பம்!” என்ற தலைப்பில் மற்றொரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நிபுணர்கள் கமல கண்ணன் மற்றும் விவேக் பரமசிவம் ஆகியோர் உரையாற்றினர்.