இனி வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என மனித நேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.
அப்போது கூட்டத்தில்," இனி வரும் உள்ளாட்சி, மக்களவை, சட்டசபை தேர்தல்களில் மற்ற கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடாமல், தனி சின்னத்தில் மட்டுமே மனிதநேய மக்கள் கட்சி போட்டியடும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றது.
ஆனால், தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
அதுமட்டுமின்றி, தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
தனிச்சின்னத்தில் போட்டியிடாத காரணத்தால், மனிதநேய மக்கள் கட்சியால் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், இனி வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.