தமிழ்நாட்டில் நெருங்கிவரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார்.
அவற்றில் முக்கியமாக ஒன்று தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள். நிர்வாக தலைநகராக திருச்சியும், தொழில்நுட்ப தலைநகராக சென்னையும், தொழில், வணிக தலைநகராக கோவை, மொழி, பண்பாட்டிற்கு மதுரை, தமிழர் மெய்யியல் தலைநகர் குமரி என 5 தலைநகர் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பது சென்னை. தலைநகர் என்பதால் இங்கு உள்கட்டமைப்பு, சாலை வசதிகள் மற்ற மாவட்டங்களைவிட சிறப்பாக இருக்கும். காரணம் தலைநகர் என்பதால் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் சென்னையின் உள்கட்டமைப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
சர்வதேச விமான நிலையம், மேலும் கடல் சார்ந்து அமைந்துள்ளதால், அதிவேக இணைய சேவைக்கான சர்வதேசத் தரவு கேபிள்கள் இங்கு நேரடியாக இணைக்க எளிதாக இருக்கும்.
அதுபோல ஐஐடி மெட்ராஜ், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற நகரங்களை விடச் சென்னையில் பொழுதுபோக்கு, தங்கும் வசதி மற்றும் பன்முகக் கலாச்சாரம் அதிகம் இருப்பதால் ஊழியர்களை ஈர்ப்பது எளிதாக உள்ளது.
இதுபோன்ற பல காரணங்களால் கூகுள் மற்றும் அது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நிறுவ சென்னையையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றன.
ஒரே தலைநகர் என்பதால் எழும் சிக்கல்கள்
மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகம் இங்கு இருப்பதால், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் முக்கியமான அரசுப் பணிகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்து சென்னைக்கு வரவேண்டியுள்ளது.
தலைநகர் என்பதால் வேலைவாய்ப்பு, கல்வி தேடி மக்கள் அதிக அளவில் குடிபெயர்வதால், சென்னையில் மிக அதிக மக்கள்தொகை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக விடுமுறை நாட்கள் அல்லது பண்டிகை நாட்கள் என வரும்போது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.
இதேவரிசையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இது மக்களின் அன்றாடப் பயண நேரத்தை பாதிக்கிறது.
ஒரே நகரை மையப்படுத்தி வளர்ச்சி இருப்பதால், வெள்ளம் அல்லது புயல் போன்ற காலங்களில் மொத்த மாநிலத்தின் நிர்வாகமும் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் குறிப்பாக வேலைக்காக சென்னையை நாடிவரும் வெளியூர் மக்கள், அவர்களின் நிறுவனங்களுக்கு அருகிலேயே குடிபெயர்வதால், சொந்த சென்னை மக்கள் புறநகர் பகுதிகளுக்கு தள்ளப்பட்டு, அங்கு உள்கட்டமைப்பு சரியாக இல்லாததால் மழை காலங்களில் அவர்களே பெரும் பாதிப்படைகின்றனர்.
புறநகர் பகுதிகளுக்கு தள்ளப்படுவதால், வேலைக்கு வர சொந்த ஊர் மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது, இது அவர்களின் நேரத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
இதைத்தாண்டி மக்கள்தொகை அதிகரிப்பால், அடிப்படை தேவைகளான நீர், சுத்தமான காற்று, கழிவு மேலாண்மை போன்ற சிக்கல்கள் எழுகின்றன. இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற பிரச்சினை. நகரத் திட்டமிடலில் சமநிலை இருந்தால் மட்டுமே பூர்வீக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.
இதனாலேயே எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து திருச்சியை இரண்டாம் தலைநகராக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சமீபகாலமாக கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலும் டெக் நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்கி வருகின்றன.
இந்நிலையில் நாதக தலைவர் சீமான் 5 தலைநகர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இது எந்த அளவு சாத்தியம்? இந்த முன்மொழிவு பலராலும் பாராட்டப்படுகிறது. காரணம் சென்னை போன்ற ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மக்கள் நெரிசல் குறைந்து, மற்ற நான்கு நகரங்களிலும் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும்.
இதனால் வேலைக்காக இங்கு வந்து பெற்றோரை, மனைவியை, கணவரை, குடும்பத்தை, என உறவுகளை பிரிந்து வாழும் சூழல் பலபேருக்கு ஏற்படாது. பலரும் சொந்த ஊரிலேயே வேலை அல்லது அருகிலேயே வேலை என்ற மன திருப்தியோடு இருப்பர். பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும். மேலும் பல நன்மைகள் ஏற்படும்.
ஆனால் இதில் உள்ள நிர்வாக சிக்கல்கள் என்ன?
அரசுத் துறைகள் ஐந்து இடங்களில் பிரிந்து இருந்தால், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு கடினமாகலாம். சீமான் சொன்னதுபோல திருச்சி நிர்வாக தலைநகர் என்றால், புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களை அங்கு கட்டமைக்க மிகப்பெரிய நிதி தேவைப்படும்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து மாவட்டங்களும் ஏற்கனவே நகரமயமாகி வருகின்றன. இருப்பினும் தலைநகராகும்போது உட்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் என இன்னும் நகரமயமாதல் அதிகமாகும்.
இதனால் அங்குள்ள அழகான கிராமங்களின், ஊர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறுபடும், பாதிக்கப்படும். தொழிற்சாலைகளால் காற்று மாசு உள்ளிட்ட பிரச்சனைகளும் எழலாம்.
வாக்குறுதிகள்
இறுதியாக, இது நாதக தலைவர் சீமான் கொடுத்த வாக்குறுதிக்காக அல்ல, பொதுவாக. தேர்தல்களின்போது உள்கட்டமைப்பு என்பது வாக்குறுதியாக கொடுக்கும்போதே பலரும் அறிந்துகொள்ளலாம், வாக்குறுதி கொடுக்கப்படும் நகரங்கள், ஊர்கள் எந்த நிலையில் இருக்கும் என்று.
இந்தியாவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம்தான் என்பதில் ஆச்சர்யமில்லை.
இருப்பினும், இன்னும் தமிழ்நாட்டில் எத்தனை கிராமங்கள் சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கின்றன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். வெறும் தலைநகரங்களை மட்டும் மாற்றினால் நிலைமாறும் என்பதை தாண்டி, அனைத்து மாவட்டங்களின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும்.