மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.
சிவகங்கையில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் சுதர்சன நாச்சியப்பன் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுதர்சன நாச்சியப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இ.எம். சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர். எம்.ஏ.,பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.