ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ரவி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் 120 இடங்கள் வரையில் அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றும் கருத்துக்கணிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அந்த கருத்துக்கணிப்பை நடத்தியது எப்படி என்பது பற்றியும் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
எனக்கு சிறு வயதிலிருந்தே அரசியலை மிக உன்னிப்பாக கவனிக்கும் பழக்கம் உள்ளது. 1968-ம் ஆண்டு, எனக்கு 6 வயதாக இருக்கும் போது, மதுரையில் எனது தந்தை அறிஞர் அண்ணாவிடம் அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொடுத்தார். அப்போது பி.டி.ஆர் பழனிவேல்ராஜன், பொன். முத்துராமலிங்கம், மதுரை முத்து ஆகியோர் அவரது தந்தையின் நண்பர்களாக இருந்தனர்.
1977-ல் அவசரநிலை முடிவுக்கு வந்த பிறகு நடந்த தேர்தலில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் எனது தந்தை சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரஸ், ஜனதா தளம், திமுக மற்றும் புதிதாக எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக என 4 முனைப்போட்டி நிலவிய அந்த நேரத்தில் நான் எனது தந்தையுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.
எனது பள்ளியின் தாளாளரான நாச்சிமுத்து ஐயா இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எனவே ஆரம்பத்திலிருந்தே அரசியல் சூழ்நிலையிலேயே நான் வளர்ந்துள்ளேன்.
31 ஆண்டுகள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதில் கிடைத்த கள அனுபவம், அரசியல் நிலவரங்களை துல்லியமாக கணிக்க எனக்கு பெரிதும் உதவியது. சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் தமிழக வெற்றி கழகத்தின் அமைதியான அலை வீசி இருப்பதை நான் பதிவிட்டுள்ளேன்.
இந்த தரவுகளை வெறும் புள்ளிவிவரமாக மட்டும் பார்க்காமல் களத்தில் உறுதிப்படுத்த, எனது முன்னாள் காவல்துறை நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பயன்படுத்தி கள ஆய்வை நடத்தினேன். தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் 250 முதல் 400 பூத்கள் இருக்கும். அதில் 1000 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டோம்.
பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளைத் தனித்தனியாகப் பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
"தற்போது யாருக்கு வாக்களித்தீர்கள்? முன்பு யாருக்கு வாக்களித்தீர்கள்? ஏன்?" என்பது போன்ற எளிய கேள்விகள் கேட்கப்பட்டு இந்தத் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் பிறகுதான் தவெக 121 இடங்களை வெல்லும் என துல்லியமாக தெரிவிக்க முடிந்தது.
40 ஆண்டுகள் அரசியலில் இருந்த தன் தந்தை ஒரு சமூக நீதிக்காகப் போராடியவர் என்றும், "எனக்குப் பிறகு நீ அரசியலுக்கு வரக்கூடாது" என அவர் கூறிய அறிவுரை இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டுள்ளது. விஜய் பணி செய்ய அழைத்தால் செல்வீர்களா என்று கேட்குறீர்கள். முதலில் அழைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்.
டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என்று மக்களுக்கு தேவையானதை விஜய் முதலில் செய்துள்ளார்.
அரசியல் சார்பு இல்லாமல் விஜய் அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்ற விஜய்யின் அதிரடி உத்தரவு 100 சதவீதம் பாராட்டுக்குரியது. மக்கள் நலனுக்கு அவர் கொடுத்துள்ள இந்த முன்னுரிமைக்காக, கடந்த 10 நாள் ஆட்சியை மதிப்பிட்டு CM விஜய்க்கு நான் 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.