தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் விழப்போகும் அடுத்த விக்கெட்: அடுத்த வாரம் த.வெ.க.வில் இணைய விஜயபாஸ்கர் திட்டம்

இணைப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது விஜயபாஸ்கருடன் அவரது ஆதரவாளர்களும், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் பெருமளவில் த.வெ.க.வில் இணைய உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை தழுவிய நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.,வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சி.விஜயபாஸ்கர். குறிப்பாக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவளித்து சட்டமன்றத்தில் வாக்களித்தார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கி புதிய மாவட்ட செயலாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் அப்போதே வேறு கட்சியில் இணைய திட்டமிட்டார். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் சென்று சேர்ந்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு செல்லலாமா? என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக கருத்து கேட்டு வந்தார்.

அப்போது த.வெ.க. சென்றால் உரிய மரியாதை கிடைக்காது என்றும், கொள்கை ரீதியாக செயல்பட வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று விஜயபாஸ்கருக்கு சிலர் ஆலோசனை தெரிவித்தனர். இதனால் அவர் தாய் கழகமான தி.மு.க.வில் இணைய முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

த.வெ.க.வில் இணைகிறார்

அவரது ஆதரவாளர்கள், விஜயபாஸ்கர் எந்த முடிவெடுத்தாலும் அவருடன் செல்ல ஏராளமான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். ஆனால் அவர் காலம் கடத்துவதால் அவரது செல்வாக்கில் சரிவு ஏற்படுவதை உணர முடிகிறது என தெரிவித்தனர். மேலும் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக விராலிமலை பகுதி முழுவதும் ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இறுதியாக த.வெ.க.வில் இணைய விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக த.வெ.க. முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரம் புதன்கிழமை அவர் சென்னையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைய திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது விஜயபாஸ்கருடன் அவரது ஆதரவாளர்களும், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் பெருமளவில் த.வெ.க.வில் இணைய உள்ளனர்.

மேலும் த.வெ.க.வில் தனக்கு மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா மண்டலத்தில் மிக வலுவான மக்கள் செல்வாக்கும், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அசாத்திய திறமையும் கொண்டவரான விஜய பாஸ்கரின் வருகை த.வெ.க.விற்கு பெரும் பலமாக மாற வாய்ப்புள்ளது.

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஏற்கனவே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். தற்போது விஜயபாஸ்கரும் த.வெ.க.வில் இணைய உள்ளதால் அவரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்பதால் விராலிமலை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயரும்.

வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) வளர்பிறை முகூர்த்தநாள் என்பதால் அன்று த.வெ.க.வில் இணைய விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மக்களின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.