தமிழக செய்திகள்

த.வெ.க.விற்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஆதரவு

தவெகவிற்கு ஆதரவு அளித்தால், என்னை கட்சி பதவியிலிருந்து நீக்குவார் என எனக்கு தெரியும், தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்தேன்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள். சட்டசபையில் த.வெ.க.விற்கு ஆதரவு அளித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து கே.சி.வீரமணியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். புதிய மாவட்ட செயலாளராக டாக்டர் பசுபதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கே.சி.வீரமணி எம்.எல்.ஏ. இன்று ஜோலார்பேட்டையில் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

21 ஆண்டுகாலம் நான் அதிமுகவில் பயணித்து, மாவட்ட செயலாளராக இருந்தேன், பல்வேறு அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை வகித்தேன். தற்போது ஆட்சி மாற்றத்தால், தி.மு.க.வுடன் கூட்டணி என நெருப்பில் குதிக்க சொல்கிறார் நம்முடைய பொதுச்செயலாளர், அதனால் மன வருத்தம் ஏற்பட்டது.

கடந்த தேர்தலில் அ.திமு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் கூட அதிமுக பெறவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்து, வீட்டில் அமர்ந்திருக்க மனம் இல்லாமலும், இவ்வளவு செலவு செய்து, தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஆளும் கட்சியுடன் சேர்ந்தால் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்தேன்.

உயிருள்ள வரை நான் அ.தி.மு.க. தான், என்னுடைய சின்னம், இரட்டை இலை, என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்.

மேலும் தவெகவிற்கு ஆதரவு அளித்தால், என்னை கட்சி பதவியிலிருந்து நீக்குவார் என எனக்கு தெரியும், தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்தேன்.

நான் என்றைக்கும் அ.தி.மு.க.வினருடன் பயணிப்பேன், மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளருடன், அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணிக்கவும், நானும், கட்சி பதவியை விட்டு, அ.தி.மு.க. தொண்டனாக மாவட்ட செயலாளருடன், கட்சியை வளர்க்க பயணிப்பேன்.

திருப்பத்தூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்த போது வேலூர் தி.மு.க. கோட்டையாக இருந்தது. நான் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தொண்டர்களின் உழைப்பால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டையாக மாறியது.

தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்ட செயலாளரை அறிவித்துள்ளார். அவருக்கு நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும். புதிய மாவட்ட செயலாளருடன் பயணிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. தான் எனக்கு முக்கியம். எடப்பாடி தான் எங்கள் தலைவர். அவர் பின்னால் தான் இருக்கிறோம். இதுதான் எங்கள் நிலைபாடு. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் பயணிப்போம் என்றார்.