தமிழக செய்திகள்

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழப்பு

பூர்ணிமா கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். தீக்காயம் அடைந்த பூர்ணிமாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாலை மலர்

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் இவரது மகன் சசி மோகன் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவரது மனைவி பூர்ணிமா (வயது 30) கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்தார்.

இதில் அவர் அணிந்திருந்த ஆடை விளக்கில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா உயிரிழந்தார்.