குமாரி கலா தலைமறைவாகி விட்டார். அவர் 12 சரக்கு வேன் டிரைவர்களிடம் ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பரங்கிமலையில் உள்ள, தென் சென்னை காவல்துறை இணை ஆணையரிடம் புகார் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி கலா. இவர் சென்னை விமான நிலையத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சீனியர் சூப்பிரண்டு அதிகாரியாக, பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.
பின்னர் குமாரி கலா, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் இருந்து, சரக்கு பெட்டகங்களை, சென்னை விமான நிலைய கார்கோவுக்கு எடுத்துச் செல்லும், சரக்கு வாகனங்களை, ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு இயக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில், உயர் அதிகாரியாக, பணியில் இருப்பதாக கூறி சரக்கு வாகன டிரைவர்கள் சிலரிடம் ரூ.2 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்பு குமாரி கலா, வேலைக்கான போலியான விண்ணப்ப படிவங்களை, அவர்களிடம் கொடுத்து, அதை நிரப்பி வாங்கிக் கொண்டார்.
ஆனால் பணம் கொடுத்து சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், பணம் கொடுத்தவர்களுக்கு, விமான நிலைய பணிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமாரி கலாவிடம் கேட்டபோது தொடர்ந்து காலம் தாழ்த்தினார்.
இதனால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் விசாரித்த போது வேலைவாங்கி தருவதாக கூறி குமாரி கலா மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
மேலும் திடீரென குமாரி கலா தலைமறைவாகி விட்டார். அவர் 12 சரக்கு வேன் டிரைவர்களிடம் ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பரங்கிமலையில் உள்ள, தென் சென்னை காவல்துறை இணை ஆணையரிடம் புகார் செய்யப்பட்டது.
இதுதெடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய போலீசார், குமாரி கலாவை கைது செய்தனர். அவர் ஏற்கனவே, பணியில் இருந்த போதே, பல பேரிடம் இதே போல் சென்னை விமான நிலையத்தில் நிரந்தர பணி என்று கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
அப்போதே இந்திய விமான நிலைய ஆணையம், குமாரி கலா மீது, துறை ரீதியான விசாரணைகள் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.