தமிழக செய்திகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், ஒருமையில் பேசியதாகவும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. நகர செயலாளர் செல்வம் புகார் செய்தார். அதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அடைந்துள்ள அதிருப்தி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்து பேசினேன். அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் என் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

முன்ஜாமின் மனு தள்ளுபடி

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்து பார்த்த நீதிபதி, “அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்வதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இன்று சென்றார். அப்போது அவரை ஆத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரென்னீஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் ஏறி போலீஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது காரில் இருந்து இறக்கி போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

சாலை மறியல்

அப்போது அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் முதன் முதலாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.