தமிழக செய்திகள்

'ரீல்சை' மறந்து ரியாலிட்டிக்கு வாருங்கள்..!- மின்வெட்டிற்கும் தி.மு.க. மீது பழிபோடுவதா?- செந்தில் பாலாஜி

பியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? என்று செந்தில் பாலாஜி கேள்வி.

முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மாற்றத்தைத் தருகிறேன்’ என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற த.வெ.க. அரசு தனது ஒரு மாத கால ஆட்சியில்- வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போலி ரீல்ஸ்

'சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை' என்ற நிலை மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

‘பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்’ என்ற பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. நிர்வாகத் திறமையின்மையை மறைக்க ‘போலி ரீல்ஸ்’ போடுவது போல் தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.

'பியூஸ் கேரியரை திருடுகிறார்கள்' என்று சொல்லி ஒரு சி.சி.டி.வி. கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர். பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனும் கேள்வி எழுப்புவான் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா?

பியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து ‘ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்’ என்றார்.

காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன ‘ஹார்ட் டிஸ்குகளில்’ முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது.

சீரான மின்சாரம்

‘ஹார்ட் டிஸ்க்’ திருட்டுக்கும், ‘கரண்ட் கட்டுக்கும்’ என்ன சம்மந்தம்? 3-வதாக ‘மின்வாரியப் பணியாளர்கள் சதி செய்கிறார்கள்’ எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.

த.வெ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும் அவலம் தான். தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்.

ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை. எதுவுமே இல்லை. இதுவும் த.வெ.க. ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்.

ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான். புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021-ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022-ல் 17,196 மெகாவாட், 2023-ல் 18,053 மெகாவாட், 2024-ல் 19,049, 2025-ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

தடையில்லா மின்சாரம்

மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொது மக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம்.

ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சினையை தீர்த்து பொதுமக்கள் இரவில் நிம்மதியாக உறங்க, த.வெ.க அரசு இனியாவது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயல வேண்டும்.

மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் முதலமைச்சரும் ‘ரீல்சை’ மறந்து ‘ரியாலிட்டி’க்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.