மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சுமார் 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியது.
அந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி-கொடிகள் அனைத்தும் காய்ந்து கருகி உள்ளன.
இதன்காரணமாக நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு, அங்குள்ள பல ஏக்கர் வனப்பகுதிகள் நாசமாகி வருகின்றன.
இந்நிலையில் ஊட்டி மசினகுடி அடுத்த மரவகண்டி பவர் ஹவுஸ் பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு அங்குள்ள பல்வேறு வனப்பகுதிகளுக்கு பரவுகிறது. இதனால் அங்குள்ள மரங்கள், கொடிகள், செடிகள் அனைத்தும் தீக்கிரையாகி வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வனப்பகுதியில் கடும் வெயில் காரணமாக அந்த பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி பார்சன்ஸ்வேலி பகுதியில் தொடர்ந்து பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மசினகுடி அடுத்த மரவகண்டி பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளதால் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் வனப்பகுதியில் பற்றி பரவும் தீயை அணைப்பது வனத்துறையினருக்கு பெரிய சவாலாகவே உள்ளது. இதற்கிடையே வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.