தமிழக செய்திகள்

ஆசனூர் வனப்பகுதியில் காட்டுத்தீ - 150 ஏக்கர் எரிந்து சேதம்

6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க போராடினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது

மழை இல்லாததால் மரம் மற்றும் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது. நேற்று முன்தினம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள மாவள்ளம் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து வனத்துறையினர் மற்றும் ஆசனூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென வனப்பகுதி முழுவதும் பரவியது. வனத்துறையினர் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்க முடியாமல் திணறினர். மொத்தம் 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க போராடினர்.

இந்நிலையில் வனப்பகுதியில் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த தீ விபத்து மூலம் சுமார் 150 ஏக்கர் பரப்பிலான மரம், செடி, கொடிகள், மூலிகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.