குட்டி யானை 
தமிழக செய்திகள்

சிறுமுகை வன மையத்தில் குட்டி யானை பராமரிப்பு

வனத்துறை மருத்துவர்கள் மூலம் அந்த யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயை பிரிந்த ஒரு குட்டி யானை மீட்கப்பட்டது.

குட்டி யானை மீட்பு

இந்த யானையை மீண்டும் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் அந்த குட்டி யானையை சிறுமுகையில் யானை கூட்டங்கள் சேர்க்கவில்லை.

தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வனஉயிரின சிகிச்சை மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர். அதன்பிறகு உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்த குட்டி யானை ஆனைமலை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

சிறுமுகையில் பராமரிப்பு

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக பகுதியில் கடந்த ஜூலை மாதம் தாய் இறந்த நிலையில் சுமார் 3 மாத குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்த யானை சிறுமுகை பெத்திக்குட்டை வனஉயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பபட்டது.

தொடர்ந்து அந்த குட்டி யானையை பராமரிப்பதற்காக ஆனைமலை கோழிக்கமுத்தி முகாமில் இருந்து பாகன் முருகன் என்பவர் வரவழைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சத்தான ஆகாரங்கள்

இந்த முகாமில் குட்டி யானைக்கு புரோட்டின் பவுடர், இளநீர் உள்ளிட்ட ஆகாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் அந்த யானை தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளது. இதனால் காலை, மாலை ஆகிய 2 வேளையும் அந்த யானையை பாகன் நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்று வருகிறார்.

வனத்துறை மருத்துவர்கள்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்தியூரில் மீட்கப்பட்ட குட்டி யானை தற்போது பூரண உடல்நலத்துடன் சுறுசுறுப்பாக உள்ளது. மேலும் வனத்துறை மருத்துவர்கள் மூலம் அந்த யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT