நீலகிரி மாவட்டம் ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓவேலி மேற்கு பிரிவு அம்புலிமலைக்கு யானைகள் கூட்டம் நேற்று காலை வந்தது.
அப்போது அந்த கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி யானை தனியாக பிரிந்து விதுலாவேலி எஸ்டேட் ஓடைக்கு தண்ணீர் குடிக்க சென்றது. அந்த நேரத்தில் அந்த யானை சேற்றுக்குள் வசமாக சிக்கி கொண்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் ஓவேலி வனச்சரக பணியாளர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது குட்டி யானை சேற்றுக்குள் சிக்கி தவிப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட குட்டி யானையை அருகில் உள்ள யானைகள் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள், வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது குட்டி மீட்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகே காட்டு யானைகள் கூட்டமாக நிற்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்த குட்டியை வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். அதன்பிறகு அந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்து கூட்டமாக அடர்வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.
ஓவேலி வனச்சரக பகுதியில் சேற்றுக்குள் சிக்கிய குட்டி தாய் யானையுடன் சேர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட குட்டி யானையின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் தொடர்ந்து குட்டி யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.