தமிழக செய்திகள்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிகிறது..!- நள்ளிரவு முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்

விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. தடைகாலம் இன்று (14-ந்தேதி) வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.

இந்த தடைகாலத்தில் விசைப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது விசைப் படகுகள், வலைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்றுடன் மீனவர்களின் தடை காலம் முடிவடைவதால் அவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகிறார்கள். காசிமேடு துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் இன்று நள்ளிரவு முதல் ஆழ்கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளது.

விசைப்படகுகளில் தேவையான உணவுகள், மீன்பிடி வலைகள், ஐஸ் கட்டிகள், டீசல்கள், குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காசி மேடு மீன்பிடி துறைமுகம் மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது.

கடலுக்குள் செல்லும் மீன்வர்கள் குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் இருந்து விட்டு பின்னர் கரை திரும்புவர். எனவே விசைப்படகு மீனவர்கள் அடுத்தவாரம் கரை திரும்புவார்கள் என்பதால் அப்போது முதல் மீன் விலை குறையவும், பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.

வஞ்சிரம்-ரூ.1,300, சங்கரா-ரூ.1000, நவரை-ரூ.300, கானங்கத்த- ரூ.200, கவரை-ரூ.150, பாறை மீன்-ரூ.800, இறால்-ரூ.400, நண்டு-ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ள நிலையில் மீனவர்களுக்கு வழங்கும் மானிய டீசலை உயர்த்தி தரக்கோரி மீனவ சங்கத்தி னர் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் விஜயேஷ் கூறியதாவது:-

த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின் போது, மீன்பிடி படகுக ளுக்கான டீசல் மானியம் 1800 லிட்டரில் இருந்து 3600 லிட்டராக உயர்த்தப்படும் என்று கூறி இருந்தனர்.

இந்த மானிய டீசலை மீனவர்களுக்கு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் நாங்கள் படகுகளை இயக்காமல் இருந்ததால் படகு மற்றும் வலைகள் சேதம் அடைந்துள்ளன.

இதனை சரி செய்வதற்கு தமிழக அரசு மீனவர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். மேலும், டீசல் வாங்கும்போது விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.