தமிழக செய்திகள்

நடுக்கடலில் நாட்டுப்படகுடன் மூழ்கி தத்தளித்த 4 பேரை மீட்ட மீனவர்கள்

கடலுக்குச் சென்ற மீனவர்கள் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்து, நாட்டு படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை அருகில் இருந்த மற்ற மீனவர்கள் விரைந்து மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் வேப்ப மரத்துப்பனை மீனவ கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

மீனவர்கள்

கடந்த சில தினங்களாக மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் தங்களது நாட்டு படகுகளில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு நாள்தோறும் வழக்கமாக கடலுக்குச் சென்று வருகின்றனர்.

கடலில் காற்றின் வேகம்

இந்த நிலையில் நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். கடல் சீற்றத்தினால் தாக்குப் பிடிக்க முடியாமல் மீனவர்கள் சென்ற நாட்டுப் படகு அங்குமிங்கும் அலைக் கழித்து ஒரு கட்டத்தில் கடலில் மூழ்கத்தொடங்கியது.

நாட்டுப்படகு மூழ்கியது

இதையடுத்து அந்தப் படகில் சென்ற நான்கு மீனவர்களும் உயிர் பிழைக்கும் நோக்கில் கடலில் குதித்து தத்தளித்தனர். இதனைப்பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்த மற்ற மீனவர்கள் விரைந்து செயல்பட்டு, கடலில் மூழ்கிய நாட்டு படகையும், நான்கு மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று கடல் சீற்றத்தில் ஏராளமான நாட்டுப் படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்து விடுவதாகவும், இதனால் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தூண்டில் வளைவு

எனவே தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT