சீனிவாசபுரம், முள்ளிமா நகர் பகுதி மீனவர்கள் புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை மாநகராட்சியும் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.
சுமார் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் 15 அடுக்கு தளங்களுடன் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனிவாசபுரம், முள்ளிமா நகர் பகுதி மீனவர்கள் புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 9 மீனவ கிராமங்கள் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை திரட்டி தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கும் என்றும் மாற்றிடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து மீனவர் சங்க தலைவர் விஜயன் கூறியதாவது:-
புதிய தலைமைச் செயலகம் இங்கு அமைந்தால் மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளை உள்ளடக்கியது பள்ளி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆட்சி புரிந்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை. கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் இடத்தை மட்டும் கணக்கில் கொண்டு தலைமைச் செயலத்தை இங்கு கட்ட த.வெ.க. அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதி சீனிவாசபுரத்தில் அனைத்து மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த 9 கிராமங்கள் தவிர பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் தமிழக அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். அரசு மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.