தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தூத்துக்குடி:

வங்கக்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.