பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும். 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர்.
பழவேற்காட்டில் கடல் நீர் 6 மணி நேரம் முகத்துவார வழியாக ஏரிக்கும், மீதம் உள்ள 6 மணி நேரம் ஏரியில் இருந்து கடலுக்கும் சுழற்சி முறையில் சென்று வருகின்றன.
இதனால் ஏரியில் தண்ணீர் குறையாமலும் சூடாகாமலும் இருப்பதால் ஏரியில் வாழும் மீன்கள், இறால்கள் நன்கு வளர்ந்து காணப்படும். இதனால் பழவேற்காடு மீன்களுக்கு தனி சுவையும், தனி மவுசும் உண்டு.
பழவேற்காடு கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் வைத்து பதப்படுத்தப்படாமல் நேரடியாக விற்கப்படுவதால் சென்னையில் இருந்தும் மீன் பிரியர்கள் ஏராளமான பேர் விடுமுறை நாட்களில் குவிந்து வருகிறார்கள்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் காணப்படுவதால் சென்னை காசிமேடு பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாததால் பெரிய மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்து உள்ளது. இதனால் தற்போது சென்னை மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிகமாக பழவேற்காடு பகுதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறகர் பகுதிகளை சேர்ந்தவர்களும் பழவேற்காடு மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பழவேற்காட்டில் விடுமுறை நாட்களில் மீன் வாங்க வரும் மீன் பிரியர்களின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான இன்று கூட்டம் களை கட்டியது. எனினும் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வஞ்சிரம் ரூ.1400 வரை விற்பனை செய்யப்பட்டது. பால் சுறா-ரூ.800க்கு விற்பனையானது.
பழவேற்காடு மார்க் கெட்டில் மீன் விலை வருமாறு:- பாறை மீன்-ரூ.600 முதல் 800, வாளை- ரூ.259, இறால்- ரூ.300 முதல் ரூ.600 வரை, காணங்கத்தை- ரூ.350 கொடுவா-ரூ.800, வவ்வால்-ரூ.600, உள்பாத்தி-ரூ.250, கோல்வாசி-ரூ.300, கடல் நண்டு-ரூ.400, கிளிமீன்-ரூ.250, சங்கரா-ரூ.300, ஏரி நண்டு- ரூ.300 முதல் 800 வரை, சிறிய வகை மீன்கள்-ரூ.200 முதல் ரூ.300 வரை.