கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ம் ஆண்டு மலர்ந்தது. இந்தப் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. ஆனால் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இதனால் ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது. மேக மூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்திற்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.