பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் டாடா ஏசி வாகனத்தில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வடவாறு அருகே கச்சேரி தெருவில் ஒரு வீட்டில் அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்ட் ராபின்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், தலைமை காவலர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அடுத்த வடவாறு அருகே உள்ள கச்சேரி தெரு பகுதிக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசார் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த கம்பி மத்தாப்புகள், பட்டாசுகள், தீபாவளி துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் டாடா ஏசி வாகனத்தில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சீல் வைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் கருணாகரநல்லூரை சேர்ந்த சுரேந்தர்(21) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்தா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உரிய உரிமம் பெறாமல் பட்டாசுகளைப் பதுக்கி வைத்து விற்பதாகவும், சில இடங்களில் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளைத் தயாரித்து விற்பதாகவும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.