தமிழக செய்திகள்

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 3-ந்தேதி தொடக்கம்: கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

பட்டாசு விற்பனை 3-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெறும்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் வைக்க 30 வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் மூலம் சிறப்பு விற்பனை நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கோர்ட்டு வழக்கு காரணமாக கடைகள் திறப்பது தாமதமாகி உள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி தீவுத்திடலில் 30 கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அதற்கான டெண்டர் விடப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பட்டாசு கடைகள் திறப்பது குறித்து சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா கூறியதாவது:-

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் வைக்க 30 வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாளில் பணிகள் முடிந்து விடும். பட்டாசு விற்பனை 3-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டு பட்டாசு விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. சிவகாசியில் நிறைய பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தேவையான அளவுக்கு பட்டாசு கிடைக்கவில்லை.

அதனால் கடைசி நாள் வரை பட்டாசு வாங்குவதற்காக காத்திருக்க வேண்டாம். விரும்பிய ரகங்கள் முதலிலே விற்று தீர்ந்து விடும். புதிய பட்டாசு வகைகள் இந்த ஆண்டு மிகக் குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT