தமிழக செய்திகள்

சின்னமனூர் அருகே பட்டாசு குடோன், கடையில் தீ விபத்து

தீ விபத்தில் 2 குடோன்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுடன் கடையில் இருந்த அனைத்து பட்டாசுகளும் சாம்பலானது.

தீ விபத்தில் பணியில் இருந்த பெண் உட்பட 4 ஊழியர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு குடோன், கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

பட்டாசு கடை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது இவர் பட்டாசு கடை அமைப்பது வழக்கம். அதன்படி இந்த வருட தீபாவளிக்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பே சிவகாசியில் இருந்து மொத்தமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் கொள்முதல் செய்து வேப்பம்பட்டியில் உள்ள குடோனில் வைத்திருந்தார். நேற்று காலை முதல் குடோனுக்கு அருகிலேயே பட்டாசு கடை உரிமம் பெற்று வைத்திருந்தார்.

இந்த கடையில் 3 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பட்டாசு விற்பனை செய்து வந்தனர்.

நள்ளிரவில் தீ விபத்து

நேற்று இரவு 11.30 மணியளவில் பட்டாசு கடைக்கு தார்ப்பாய் போட்டுவிட்டு ஊழியர்கள் அருகிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கடை முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அச்சத்துடன் ஓடத் தொடங்கினர். தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வேகமாக பரவிய காட்டுத்தீ அருகில் இருந்த குடோனுக்கும் பரவியது. இதனால் திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல தீ கொழுந்துவிட்டு எரிந்தும், வெடித்தும் வந்தது. இதனால் தீயை அணைக்க அருகில் செல்லவே அச்சமடைந்தனர். நள்ளிரவில் பிடித்த தீ இன்று அதிகாலை 3 மணிவரை விடாமல் எரிந்து கொண்டே இருந்தது. தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொருட்கள் சேதம்

இந்த தீ விபத்தில் 2 குடோன்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுடன் கடையில் இருந்த அனைத்து பட்டாசுகளும் சாம்பலானது. மேலும் அருகில் நிறுத்தி வைத்திருந்த ஒரு டிராக்டர், 2 சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் பணியில் இருந்த பெண் உட்பட 4 ஊழியர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பட்டாசு கடை, குடோன் அமைந்துள்ள பகுதி குடியிருப்புகள் இல்லாமல் வயல்வெளி அருகே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சந்திரசேகர், கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். எதிர்பாராமல் தீ பிடித்ததா அல்லது யாரேனும் தீ வைத்ததால் விபத்து நடந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் கருவிகளை வைத்திருக்கக் கூடாது. சிகரெட் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சின்னமனூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT