தமிழக செய்திகள்

வில்லுக்குறி சந்திப்பில் பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

பேக்கரியில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் கடை முழுவதும் தீப்பிடித்தது.

கடைக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தக்கலை அருகே வில்லுக்குறி, பரம்பை பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் நாகர்கோவில்- தக்கலை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள வில்லுக்குறி சந்திப்பு பகுதியில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு மோகன் வீட்டிற்குச் சென்றார்.

பேக்கரி தீ விபத்து

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறந்தார். அவர் ஷட்டரை திறந்த போது, உள்ளே கரும் புகை மண்டலம் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன், என்ன நடந்தது என பேக்கரிக்குள் சென்று பார்க்க முயன்றார். அப்போது பேக்கரியில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் கடை முழுவதும் தீப்பிடித்தது.

தீயணைப்பு வீரர்கள்

இது குறித்து உடனடியாக தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட பேக்கரியை ஒட்டி ஏராளமான வணிக நிறுவனங்களும், கடைகளும் அமைந்துள்ளதால், அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல் பட்டனர்.

தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் பேக்கரிக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. காலை நேரம் என்பதால் கடைக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பொதுமக்கள்

நாகர்கோவில்-தக்கலை மெயின் சாலையில் அமைந்து உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பு பகுதியில் காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும், சாலை முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது இரவு நேரத்தில் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு, காலை கடையைத் திறக்கும்போது தீப்பிடித்ததா? என்பது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT