தமிழக செய்திகள்

மணலி அருகே எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து

தீ கொளுந்து விட்டு எரிவதால் நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர்.

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சுர் அருள்முருகன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் குடோன் உள்ளது. இன்று காலை இந்த குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் குடோன் உள்ளே இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மணலி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 5 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். குடோனில் இருந்த எண்ணெய் கேன்கள் வெடித்து சிதறியதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் உடனடியாக தீயணைப்பு வீரர்களால் குடோனை நெருங்க முடியவில்லை. பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ரசாயன கலவை மூலம் குடோனில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த ஏராளமான ஆயில் கேன்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

தீயை அணைக்க முயன்றபோது கடுமையான புகை மூட்டம் காரணமாக 2 தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் குடோன் அருகே இருந்த மற்றொரு தொழிற்சாலைக்கும் தீ பரவி உள்ளது. தீ கொளுந்து விட்டு எரிவதால் நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். குடோனில் தீப்பற்றிய உடன் அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.