தமிழக செய்திகள்

சோழவந்தான் பேட்டை பகுதியில் இட்லி கடையில் திடீர் தீ விபத்து

இட்லி கடை மற்றும் வீடு ஆகியவற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிடித்த உடன் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டை மயானம் பகுதி அருகில் நெல்கொள் முதல் அமைக்கும் களம் ஒன்று உள்ளது. இதன் அருகில் பானு என்பவர் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். அருகிலேயே கடையுடன் சேர்ந்து அவரது வீடும் உள்ளது.

இட்லி கடை

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இட்லி கடை மற்றும் வீடு ஆகியவற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடந்த நேரத்தில் பானு சோழவந்தான் பேட்டை பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள்

இதனால் தீப்பிடித்த உடன் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீடு மற்றும் கடையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். வீட்டில் பானு இல்லாத நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

வீடு மற்றும் கடையில் தீப்பிடித்தவுடன் விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT