கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சம்பா நெல் சாகுபடி நடவு பணிகள் தொடங்கியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி கடந்த காலத்தில் நடந்து வந்தது. தற்போது மேட்டூர் அணையில் நீர் திறப்பு தாமதமான காரணத்தால் சாகுபடிக்காக நெல் நாற்று நடும் பணியும் தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது சில இடங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆண், பெண் விவசாயிகள், விவசாய பணிகளில் போதிய ஆர்வம் காட்டாமல் மாவட்ட தலைநகரான கரூர் மாநகராட்சி பகுதிக்கு டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை தயாரிப்பு, பஸ் பாடி தயாரிப்பு, ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வட மாநில ஆண் தொழிலாளர்களான மேற்கு வங்காளத்தை சேர்ந்த விவசாயிகளை கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் நடவு பணியில் ஈடுபடுத்தினர். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வடமாநில பெண் தொழிலாளர்களும் நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் பெண்கள் மட்டுமே நடவு பணியை செய்து வந்தனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வடமாநில ஆண் தொழிலாளர்களை பயன்படுத்தினோம். அவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஏக்கர் நடவு பணியை செய்து முடிப்பார்கள். விரைவாகவும், கூலி குறைவாகவும் இருந்ததால் விவசாயி பணியில் ஈடுபடுத்தி வந்தோம்.
இந்நிலையில் வடமாநில பெண் தொழிலாளர்களும் தற்போது நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களும், விரைவாக நடவு பணியை செய்கின்றனர். வட மாநிலத்தவர்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தமிழக விவசாய ஆண், பெண் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர் என்றனர்.