தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சில்மிஷம் செய்பவர்களை கண்டறிய பெண் போலீசார் சுடிதாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு, குழந்தைகளுக்கு அடையாள வளையம், பெண்களுக்கு சேப்டி பின் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதுகிறார்கள்.
சென்னையில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடை வீதிகளில் புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மாலை நேரங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகளுடன் ஜவுளி கடைகளில் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்காக பெற்றோர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இதனால் மாலை நேரங்களில் இதுபோன்ற வணிக பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் திருடர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அவர்களை பிடிப்பதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் மாம்பலம் பாண்டி பஜார் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாம்பலம் பகுதியில் மட்டும் 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி போலீசார் பைனாக்குலர் மூலமாக கண்காணித்து வருகிறார்கள். ஜவுளி கடைகளுக்கு துணி எடுக்க வரும் பெண்களுக்கு சேப்டி பின் வழங்கப்பட்டு வருகிறது. கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடையுடன் சேர்த்து பாதுகாப்பான முறையில் அணிந்து கொள்ள போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மேலும் குழந்தைகளின் கைகளில் செல்போன் எண்களுடன் கூடிய அடையாள வளையமும் அணிவிக்கப்படுகிறது. இதன் மூலம் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலில் பெண்களிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபடும் வாலிபர்களை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 3 பெண் போலீசார் தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுடிதார் மற்றும் சேலை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண் போலீசாரும் பொதுமக்களோடு பொது மக்களாக சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து வணிக பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நாளை முதல் கடை வீதிகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு பொருட்களை வாங்குவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் வருகிற 7-ந்தேதி வரையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.