தமிழக செய்திகள்

குண்டேரிப்பள்ளம் அணையில் சேற்றில் சிக்கிய பெண் யானை உயிரிழப்பு

பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்து, குழி தோண்டி அடக்கம் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு நேற்று முன்தினம் இரவு தண்ணீர் குடிக்க வந்த சுமார் 35 இருந்து 40 வயதான பெண் காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்த சிலர், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள்

சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவ குழு, சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜேசிபி, க்ரைன் உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன் கயிறு மற்றும் பெல்ட் கட்டி, சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், இந்த யானைக்கு வயது அதிகம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், யானை தானாக எழுந்து நிற்க முடியாமல் உடல் சோர்ந்து காணப்பட்டது. உடல் நலக்குறைவால் எழுந்து நடக்க முடியாமல் இருக்கிறதோ? என்ற கேள்வி எழுந்தது. யானைக்கு ஊசி, குளுக்கோஸ் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையும் வன கால்நடை மருத்துவக் குழுவால் அளிக்கப்பட்டது.

யானை

அதே சமையத்தில், ஹிட்டாச்சி உதவியுடன் கயிறு கட்டி யானையை மீட்கும் முயற்சியிலும் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். முகாம் அமைத்து யானையை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், நேற்று மாலை கடந்து இரவு நெருங்கியதால் மற்ற யானை கூட்டம், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அணைக்கு தண்ணீர் அருந்த வரும் என்பதால் மீட்கும் முயற்சியை கைவிட்டு அணைப்பகுதியில் இருந்து யானையை கண்காணித்து வந்தனர்.

இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடரலாம் என்று வனத்துறையினர் இருந்த நிலையில், இன்று அதிகாலை அந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பெண் யானை

மருத்துவ குழு, வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து சேற்றில் சிக்கிய அந்த பெண் யானையை எப்படியும் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டு விடலாம் என்று போராடியும், முடியாமல் போனது, அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று, வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் உயிரிழந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்து, குழி தோண்டி அடக்கம் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனவிலங்குகள்

அணை சுமார் 20 அடிக்கு சேரும் சகதியும் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நீண்ட ஆண்டுகளாகவே இந்த அணையானது முழுவதும் தூர்வாரப்படாமல் இருப்பதால், இதுபோன்ற வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் போது சேற்றில் சிக்கி உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

மீண்டும் இதுபோன்ற வனவிலங்குகள் உயிரிழப்பு ஏற்படா வண்ணம் தடுக்க, அணையை முழுமையாக முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT