விவசாயிகளின் மின் மோட்டார், மின் வயர் திருடு போன விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாயிகள் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தேனி தாலுகாவில் உள்ள கொடுவிலார்பட்டி, தாடிச்சேரி, கோவிந்தநகரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளின் மின் மோட்டார், மின் வயர்கள், விவசாய இடுபொருட்கள் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் இப்பகுதியில் நடந்து வருகிறது. ஏற்கெனவே விவசாயிகள் செய்து வரும் விவசாய இடுபொருட்களுக்கு சரியான விலை இல்லை.
எனவே மின் மோட்டார், மின் வயர், விவசாயிகளின் இடுபொருட்களை திருடும் திருட்டு கும்பலை அடியோடு ஒழிக்கவும், திருட்டு கும்பல் மூலம் நடைபெறும் திருட்டை தடுக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளின் மின் மோட்டார், மின் வயர் திருடு போன விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.