கலெக்டரின் பெயரில் வரும் போலியான வாட்ஸ் அப் எண்ணை நம்பி யாரும் பணம் அனுப்பவோ, தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக சினேகா உள்ளார். அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியாக வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் மர்ம கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு பணம் மற்றும் உதவிகள் கேட்கப்படுவதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கலெக்டரின் பெயரில் வரும் போலியான வாட்ஸ் அப் எண்ணை நம்பி யாரும் பணம் அனுப்பவோ, தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஏற்கனவே கடந்த வாரம் கலெக்டர் சினேகாவின் பெயரில் வேறொரு வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடி முயற்சி நடைபெற்றது. இது ெதாடர்பாக சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக மீண்டும் கலெக்டரின் பெயரில் போலியாக வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி மோசடி கும்பல் பணம் வசூல் முயற்சியில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டரின் பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான வாட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பணம் கேட்டு வரும் செய்திகளுக்குப் பதில் அளிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.